கடவுளை அறிவது எப்படி?

Loading...

இறைவன் எங்கு இருக்கிறான் என்ற கேள்விக்கு கடவுள் என்ற தமிழ்ச்சொல்லிலேயே பதில் இருக்கின்றது. இதற்கு ஒப்பான சொல் வேறு எந்த மொழிகளிலும் இல்லை என்று பன்மொழி அறிஞர் தனிநாயகம் அடிகள் அவர்கள் ஆராய்ந்து கூறியுள்ளார். கட+உள் = கடவுள். கட – என்பது எல்லாவற்றையும் கடந்து அதற்கு அப்பாலும் அப்பாலாய் நிற்கும் இறையின் வியாபகத்தைக் குறிக்கும். (All pervasive and beyond, the Cosmic dimension of the truth). உள் – என்பது அனைத்தினுள்ளும் எல்லா உயிர்களிலும் உள்ளே உயிருக்கு உயிராக, உயிரின் எஜமானனாக உறையும் இறையைக் குறிக்கின்றது. இதையே புருஷ சூக்தம் “சகஸ்ர சீர்ஷா புருஷ; ஸகஸ்ராக்ஷ ஸகஸ்ரபாத்” என்று முழங்குகின்றது.

ஆயிரக்கணக்கான தலைகளும், ஆயிரக்கணக்கான கண்களும், ஆயிரக்கணக்கான பாதங்களும் உடையவராக, இறைவனை அண்ட சாராசங்கள் அனைத்திலும் நீக்கமறக் காண்பது இந்த வரிகள். இதையே ஸ்ரீ ருத்திரமும் எங்கும் எல்லோரையும் இறைவடிவாகக் கண்டு முழங்குகின்றது. “ககுபாய நிஷங்கிணே ஸ்தேனாம் பதயே நமோ நமோ” சிறந்தவரும், வாளேந்தியவரும், கள்வர் தலைவருமாகிய பரமேஸ்வரருக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம்.

“நிஷங்கிண இஷுதிமதே தஸ்கராணாம் பநயே நமோ நமோ” வில்லில் தொடுப்பதற்காக கையில் அம்பை வைத்துக் கொண்டிருப்பவரும், அம்பறாத்தூணியை உடையவரும், கொள்ளைக்காரர்களின் தலைவருமாகிய பரமேசுவரருக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம். “வஞ்சதே பரிவஞ்சதே ஸ்தாயூனாம் பதயே நமோ நமோ” வஞ்சகராகவும், படு வஞ்சகராகவும், நயவஞ்சனையால் திருடுபவர்களின் தலைவனாகவும் உள்ள பரமேசுவரருக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம்.

palani-murugan

“நிசேரவே பரிசராயாரண்யானாம் பதயே நமோ நம” திருடுவதற்காக உள்ளே சஞ்சரிப்பவராயும், திருடுவதற்காக வெளிப்போந்து சஞ்சரிப்பவராயும்,வனங்களில் வழிப்பறிப்பவர்களின் தலைவராகவும் உள்ள பரமேசுவரருக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம். “ஸ்ருகாவிப்யோ ஜிகாஹும்ஆத்ப்யோ முஷ்ணதாம்பதயே நமோ நமோ” ஆயுதங்களால் தங்களை ரக்ஷித்துக் கொள்பவர்களாகவும், பிறரை இம்சிப்பவர்களாகவும், உழவாளியாயிருந்து எஜமானரின் தானியங்களைத் திருடுபவர்களின் தலைவராகவும் உள்ள பரமேசுவரருக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம். “அஸிமத்ப்யோ நக்தஞ்சரத்ப்ய; ப்ரக்ருந்தானாம் பதயே நமோ நம” வாளேந்தியவர்களாகவும், திருடுவதற்காக இரவில் சஞ்சரிப்பவர்களாகவும், பிறரைக்கொன்று பொருளை அபகரிப்பவர்களின் தலைவராகவும் உள்ள பரமேசுவரருக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம்.

“உஷ்ணீஷிணே கிரிசராய குலுஞ்சானாம் பதயே நமோ நமோ” தலைப்பாகை அணிந்தவராகவும், மலைவாசியாகவும், வயல்களிலும், வீடுகளிலும் திருடுபவர்களின் தலைவராகவும் உள்ள பரமேசுவரருக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம். இதையே கிருஷ்ண பகவான் பகவத்கீதையில் பின்வருமாறு கூறுகின்றார்.

“யோமாம் பச்யதி ஸர்வத்ர, ஸர்வம் சமயி பச்யதி” நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன்; எல்லாப் பொருட்களும் என்னிடம் இருக்கின்றன. “ஈச்வர ஸர்வ பூதானம் ஹ்ருதே தேசே அர்ஹீனதிஷ்டத பிராம்யன் ஸர்வ பூதானி யந்த்ராரு டானிமாய்யா” சகல பிராணிகளுக்குள்ளேயும் அவர்களின் இருதயம் என்னும் ஆன்மாவினுள்ளே இருந்து அவற்றை எல்லாம் ஆட்டிக்கொண்டிருப்பவன் ஈசுவரனே. இப்படிச் சொன்னால் இறையை அறிவது இவ்வளவு சுலபமானதென்று நினைக்கின்றீர்களா? பின்வரும் கீதா சுலோகத்தைப் பாருங்கள். “நச மத் ஸ்தானி ந சாஹம்தேஷீ அவஸ்தீத” என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை; நான் ஒரு பொளிலும் இல்லை.

‘எல்லாவற்றிலும் நான் இருக்கின்றேன்; எல்லாம் என்னிடத்தில் இருக்கின்றன’ என்று சொல்லும் கிருஷ்ணனே ‘ என்னிடத்தில் ஒன்றும் இல்லை; நான் ஒன்றிலும் இல்லை’ என்றும் சொல்லுகின்றான். புரிகிறதா? சுலபம் போலத் தோன்றினாலும் இந்த உண்மையை இந்த இறையை அறிவதும் புரிவதும் அவ்வளவு சுலபம் அல்ல. “ந அகம் ப்ரசாக ஸர்வஸ்ய” இந்த உண்மை எல்லாருக்கும் விளங்குவதில்லை.

அப்படியானால் இறைவனை ஒருபோதும் ஒருவராலும் அறியவோ அல்லது உணரவோ முடியாது என்றால் இறை என்பது ஒருபோதுமே இல்லாத ஒரு இருப்பாகிவிடும். முயற்கொம்பு, ஆகாயத் தாமரை போல. அப்படி என்றால் என்ன அர்த்தம்? இறைவன் எல்லாப் பொருள்களிலும் இருக்கிறான் ஆனாலும் அவன் அப் பொருள்களைப்போல அவனும் அளந்து அறியக்கூடிய, தோன்றி, நின்று, மறையக்கூடிய சடப்பொருள் இல்லை.

இறைவன் சடம் அல்ல. அவன் உணர்வுள்ளவன். இதை ‘சித்’ என்று சொல்லுவார்கள். ‘சித்து’ என்றால் அறிவுப் பொருள் என்று அர்த்தம். இறை தோன்றி நின்று மறையும் நிலைமாற்றங்களுக்கு உட்படாதது. இதை ‘சத்’ என்று கூறுவார்கள். சடப்பொருட்கள் அறிவு, உணர்வு இல்லாததால் அவற்றை ‘அசித்து’ என்றும், இவ்வாறான நிலைமாற்றங்களுக்கு உட்படுவதால் ‘அசத்து’ என்றும் கூறுவர். ஒவ்வொரு உயிரும் அறிவுப் பொருளகிய உணர்வுள்ள சித்தே.

உயிரும் தோன்றி நின்று மறையும் நிலை மாற்றங்களுக்கு உட்படுவதில்லை. ஆனபடியால் உயிர் சத்து ஆகும். அப்படியாயின் இறைவனும் ஒரு உயிரோ என்றால் அதுவும் இல்லை. அறிவுப்பொருளாகிய நிலைமாற்றம் இல்லாத இறை அறிவுப்பொருளாகிய நிலைமாற்றம் இல்லாத உயிரில் இருந்தும் வேறுபட்டது.

இதை ‘சிவசத்து’ என்று சிறப்பாகக் கூறுவர். உயிரை சதசத்து என்பர். சடப்பொருள் – அறிவு, உணர்வு இல்லாதது – அசித், – தோன்றி நின்று மறையும்- அசத்இறை – பூரண அறிவுப்பொருள் -சித், – நிலை மாற்றங்கள் இல்லை- சத் = சிவசத் உயிர் – அறிவுப்பொருள் – சித், – நிலை மாற்றங்களுக்கு உட்படாது – சத் = சதசத் இறைவன் இவ்வாறு சடமும் அல்லன்; உயிரும் அல்லன்; இலகுவில் அறியக் கூடியவனும் அல்லன்; அதேவேளை அறிய முடியாதவனும் அல்லன். அதேவேளை இவ்வாறு இரண்டு வகையாகவும் உள்ளான்.

ஆதலால் இவனை ‘சிவசத்து’ என்று கூறுவர். -சிவஞானபோதம் சூத்திரம் 6 (எளிமையாக்கப்பட்டது) இதையை அருணந்தி சிவம் சிவஞானசித்தியாரில் அழகாகப் பின்வருமாறு கூறுகின்றார். “அறிவுறும் பொருளோ, ஈசன் அறிவுறாதவனோ? என்னில், அறிபொருள் அசித்து அசத்தாம்; அறியாதது இன்றாம்; எங்கும் செறிசிவம், இரண்டும் இன்றிச் சித்தொடு சத்தாய் நிற்கும்; நெறிதரு சத்தின் முன்னர் அசத்தெலாம் நின்றிடாவே” -சி.சி. சுபக்கம் பாடல் 240Loading...